வெள்ளி, 26 டிசம்பர், 2014

Net neutrality என்று இப்போது பேப்பரில் அடிபடுகிறதே, அது என்ன ?
ஒரு உதாரணம் பார்க்கலாம்.
தக்காளி வாங்க மார்க்கெட்டுக்குப் போகிறீர்கள்.
"தக்காளி கிலோ என்ன விலை ?" என்கிறீர்கள்.
"விலையைச் சொல்கிறேன். ஆனால் அதற்கு முன் ஒரு கேள்வி: தக்காளியில் என்ன சமைக்கப் போகிறீர்கள் ?" என்கிறார் கடைக்காரர்.
"எதற்குக் கேட்கிறீர்கள் ?"...
"இன்றைக்கு உங்கள் வீட்டில் தக்காளி ரசமா, சூப்பா ?" என்கிறார் கடைக்காரர் மறுபடியும்.
"ரசம்தான்"
"அப்படியானால், கிலோ 25 ரூபாய்"
"ஒரு வேளை, நாங்கள் சூப் வைப்பதாக இருந்தால் ?"
"அப்போது இதே தக்காளி கிலோ 150 ரூபாய்"
"இதென்ன அநியாயமாக இருக்கிறதே !"
"சூப் வைத்துக் குடிப்பவர்களாக இருந்தால் நீங்கள் எவ்வளவு பணக்காரராக இருக்க வேண்டும் ? அதில் கொஞ்சத்தை எனக்கும் பகிர்ந்து கொடுப்பதுதானே நியாயம் ?" என்கிறார் கடைக்காரர்.

"சூப்பையா ?"
"இல்லை, உங்கள் செல்வத்தை".
நீங்கள் தயங்குவதைப் பார்த்து "வேண்டுமென்றால் தக்காளி சட்னி செய்யுங்களேன்... அதற்கு கிலோ 20 ரூபாய்தான்" என்கிறார்.
"இருந்தாலும் இதில் என்னவோ சரியாகப் படவில்லை"
"என்ன சார் இதற்கே இப்படிச் சொல்கிறீர்கள் ? தக்காளி ஜாம் செய்பவர்கள், இதே தக்காளியைக் கிலோ 500 ரூபாய் கொடுத்து வாங்கிப் போகிறார்களே !"
"என் வீட்டில் என்ன சமைக்கிறோம் என்று எப்படிக் கண்டுபிடிப்பீர்கள் ?"
"வீடு வீடாகப் போய் மோப்பம் பிடிக்க நாய்ப் படையே வைத்திருக்கிறோமே !"


இது என்ன அபத்தமான, அநியாயமான காய்கறிக் கடை என்று கொதித்துப் போகிறீர்களா ?

இதையேதான் பாரதி ஏர்டெல் செய்கிறது. நீங்கள் இணையத்தை மேய்ந்தால் ஒரு விலை, VOIPயில் பேசினால் ஆறு மடங்கு அதிக விலை - அதே பொருளுக்கு ! ஒரு GB-க்கு இவ்வளவு கட்டணம் என்பதற்கு பதிலாக, நீங்கள் பார்க்கும் வெப் சைட்டைப் பொறுத்து வெவ்வேறு ரேட். 

இவர்களுக்கெல்லாம் கொஞ்சம் இடம் கொடுத்தால் பிறகு கேபிள் டி.வி மாதிரி பத்துப் பதினைந்து இணைய தளங்களைச் சேர்த்து ஒவ்வொரு பொக்கே என்று தனித் தனியாகக் கட்டுக் கட்டி விற்பார்கள். அதில் வேண்டியவன், வேண்டாதவன் எல்லா பாலிடிக்ஸும் வந்துவிடும். பிசினஸ் போட்டியாளர்களை இருந்த இடம் தெரியாமல் அடிக்க, அவர்களின் வலை மனைகளுக்குப் போக ஆனை விலை வைப்பார்கள். அரசியலில் எதிர்க் கட்சிக் கருத்துகளைப் பேசும் வெப் சைட்டுகளின் விலையை ஆகாசத்தில் ஏற்றி, ஒரு பயல் வாயைத் திறக்க முடியாமல் செய்து விடுவார்கள். பேச்சு சுதந்திரம், பிசினஸ் சுதந்திரம், புதுமை, புரட்சி எல்லாம் நசிந்துவிடும். 

சுருக்கமாக, இணையம் செத்துவிடும் !

இதற்கு நாம் என்ன செய்யலாம் ?

(1) உங்களிடம் ஏர்டெல் இணைப்பு இருந்தால் முதலில் அதைத் துண்டியுங்கள். BSNL, ACT என்று வேறு ஏதாவது நல்ல கம்பெனிக்கு மாறுங்கள். அவர்கள் காரணம் கேட்டால் "உங்கள் பாவத்துக்கு நரகத்தில் ஆயிரம் வருஷம் எண்ணைக் கத்தரிக்காய் மாதிரி வதங்கப் போகிறீர்கள். அதில் எனக்குப் பங்கு வேண்டாம்" என்று சொல்லுங்கள்.
(2) இந்த ஆன்லைன் மனுவை TRAI--க்கு அனுப்புங்கள்:
https://www.change.org/p/telecom-regulatory-authority-of-in…
(3) தொ.தொ. அமைச்சர் ரவிசங்கர் பிரசாதுக்குக் காரசாரமாக ஒரு மின் அஞ்சல் அனுப்புங்கள்: ravis@sansad.nic.in
(4) ஏதாவது செய்யுங்கள். நாலு பேரிடம் வயிற்றெரிச்சலைச் சொல்லுங்கள். பாத் ரூமில் கதவைச் சாத்திக்கொண்டு  "ஏர் டெல் - டவுன் டவுன்  !" என்று கோஷம் போடுங்கள்.

நமக்கென்ன என்று சும்மா இருக்காதீர்கள் !