புதன், 31 ஆகஸ்ட், 2016

அட்ரஸ் சரியாக இருந்தாலே அண்ணா நகர் போன்ற பிரதேசங்களில் இடம் கண்டுபிடிப்பது கடினம். இந்த அழகில் 'அடையாறு வாராவதிக்குக் கீழே, மூத்திரச் சந்து முடிவில், பச்சை பெயிண்ட் அடித்த பெயர்ப் பலகை இல்லாத டெய்லர் கடை' போன்ற அடையாளங்களை மட்டுமே வைத்துக்கொண்டு  யாராவது எதையாவது சென்று அடைய முடியுமா ? துல்லியமான ஜி.பி.எஸ் அளவீடுகள் இல்லாமல் டெய்லர் கணேசனைத் தேடுவது கடினம் என்று திருமதிகளுக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது ?
இத்தனை நாள் வரை இந்தப் பிரச்சினைக்கு ஒரே ஒரு வழிதான் இருந்தது: மேற்படி இடத்தின் அட்ச ரேகை, தீர்க்க ரேகை தெரிந்தால் செல்ஃபோனில் கூகிள் வரை படத்தை வைத்துக்கொண்டு வழி கண்டு பிடித்து விடலாம். ஆனால் (13.009743, 80.257102) போன்ற எண்களைத் தப்பில்லாமல் கையாளுவதற்குக் கணித மேதை ராமானுஜம் தேவை. ஞாபகம் வைத்துக் கொள்வதும் கடினம்.
இப்போது இதற்கு ஒரு விடிவுகாலம் வரும் போல் இருக்கிறது. what3words.com என்ற வலை மனையில், உலகத்தின் ஒவ்வொரு இடத்தையும் மூன்று மூன்று வார்த்தைகளால் குறிப்பிடும் ஒரு முறை கண்டுபிடித்திருக்கிறார்கள். வரை படத்தில் ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டி 'இதற்கான மூன்று வார்த்தைகள் என்ன ?' என்றால் சொல்லிவிடுகிறது. அந்த வார்த்தைகளை அப்பாவிக் கணவன்மாருக்குக் கொடுத்துவிட்டால் போதும், டெய்லர் கடையைக் கண்டு பிடித்து விடுவார் ! இதை செல் ஃபோனில் ஒரு 'அப்'பாகவும் அப்பிக் கொள்ளலாம்.
ஆழி சூழ் உலகத்தின் மொத்தப் பரப்பளவையும், சுமார் பத்தடிக்குப் பத்தடி சதுரங்களாகப் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த 57 லட்சம் கோடி சதுரங்களில் ஒவ்வொன்றுக்கும் மூன்று வார்த்தைகள். நினைவு வைத்துக் கொள்ள, ஃபோனில் பரிமாறிக் கொள்ள வெகு சுலபம். உதாரணமாக, doubt.bombard.alley என்றால் ஆக்ராவில் தாஜ் மகால். dart.grandson.masses என்பது கபாலி கோவில். நெல்லையப்பர் கோவிலுக்கு வழி சொல்ல வேண்டுமென்றால் fluctuate.toasters.basics என்று சொல்லிவிடுங்கள்.
இதெல்லாம் சாதாரண அகராதி வார்த்தைகள்தான். மேற்படி முகவரிகளுக்கும் வார்த்தைகளுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. வார்த்தை வடிவில் இருப்பது, ஒரு வசதியான நினைவுக் குறிப்பு. அவ்வளவுதான்.
இனி முக்கியமான விஷயத்துக்கு வருவோம். அடையாறு ஃப்ளை ஓவரின் கீழே ஒளிந்திருக்கும் உலகப் பிரசித்தி பெற்ற பஜ்ஜிக் கடையின் முகவரி month.before.pocketed. இதற்கு வேறு எந்த முகமும் கிடையாது, முகவரியும் கிடையாது.
'கபாலி கோவில் தேர் முட்டி அருகே தெருவில் பஜ்ஜி சுட்டு விற்கும் அக்கா' என்று அட்ரஸ் தேடிக்கொண்டு அமெரிக்காவில் இருந்தெல்லாம் வந்தீர்களே, இனி தேடாதீர்கள். பஜ்ஜிக்கா இருப்பது nurture.avoid.collapsed என்ற பத்துக்குப் பத்தடி இடத்தில் !
அப்படியே மைலாப்பூரில் ஒரு தீனி நடை போனால் ஜன்னல் கடை வருகிறது: vies.include.ballpoint. (காலை இட்லி வடை பொங்கல், மாலை மைசூர் போண்டா). சாயிபாபா அளவுக்கு ஒரு cult following கொண்ட ராயர் கடை இருப்பது advice.blogs.pointed.(செவ்வாய்க் கிழமை காலை, கும்பகோணம் கடப்பாவைத் தவறவிட வேண்டாம்). அப்படியே காலாற நடந்து guidebook.silks.lakes வரை போனால், பட்டப்பா'ஸ் தளிகை என்ற புதிய ஹோட்டல் வருகிறது (செம கும்பல்).
வேளச்சேரியில் ஆரோக்கிய உணவாக கேப்பை, கேழ்வரகுத் தின்பண்டம் சாப்பிட விரும்பினால் அந்திக் கடை என்று இருக்கிறது:  each.marzipan.dwell.
உங்களுக்கு நல்ல புளியோதரை கிடைக்கும் பெருமாள் கோவில் ஏதாவது தெரிந்தால் அதன் what3words முகவரியைத் தெரிவியுங்களேன்.